அன்புள்ள கடவுளாகிய காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு அநேக ஆசிகளுடன் ஈகைவேந்தன் எழுதுவது. நீ கல்லா? கடவுளா? என்கிற விவாதம் இந்த பூவுலகில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தாலும் நீ கடவுள்தான் என நம்பிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். நானும் உன்னை கடவுளாக நம்பும் சில நண்பர்களும் உன்னைக் காண நேற்று(12.04.08) காஞ்சிக்கு வந்தோம், அங்கு எனக்கு நேர்ந்த அவலத்தை உனக்கு பிறகு சொல்கிறேன். உனக்கு நேர்ந்த அவலத்தினை முதலில் நீ தெரிந்துகொள்.
காஞ்சியில் உன்னை காண நாங்கள் வந்து சேர்ந்தது நண்பகல் நேரம், அது நீ ஒய்வு எடுக்கும் நேரமானதால் நான்கு மணிக்கு நடை திறக்கும் வரை காத்திருந்து வரிசையில் நின்றோம் நுழைவாயில் அருகில் வ்ந்தவுடன் உன்னை காண, தலைக்கு 5ரூ தரவேண்டும் என்றனர். சரி தவறுதலாக கட்டண தரிசன வரிசையில் நின்றுவிட்டோம் என எண்ணி தர்ம தரிசன வரிசை எது என வினவ, தர்மதரிசனம் எல்லாம் கிடையாது காசு கொடுத்துதான் செல்ல வேண்டும் என்றனர். காசில்லாமல் ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என்றேன், அதற்கு அவர்கள் காத்திருந்து 5 மணிக்கு மேல் காசில்லாமல் செல்லலாம் என்றனர். காசு கொடுத்துக் கடவுளை பார்க்க அவர்கள் கட்டாயப் படுத்துவதாக எனக்கு தோன்றியது.
இது குறித்து எனது புகாரினை பதிவு செய்ய அலுவலகத்தை நாடினேன். அங்கோ சனி,ஞாயிறு உயர் அதிகாரி விடுப்பு ஆனதால் பொறுப்பு அதிகாரி இருந்தார். அவரிடம் நான் ஏன் கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என கேட்க அவரோ ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் தான் கட்டணம் வாங்குகின்றோம் என்றார் கோவில் வருமானம் குறைவாக இருப்பதால் இது போன்ற ஒரு நடவடிக்கை பின்பற்றப்படுவதாக கூறினார்.
எவ்வளவோ வழிகளில் வீணாக பணம் செலவு செய்யும் நமது அரசாங்கமா தன் வறுமைக்காக உன் கையில் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் பக்தர்களிடம் பிச்சை எடுக்க வைக்கிறது, நீ எடுத்த கட்டாய பிச்சைக்காசை வைத்துதானா உன்னை பராமரிக்கிறது என்ற என் வாதத்தை அந்த அதிகாரி ஏற்கவில்லை. நான் இந்த கட்டணம் குறித்த அரசாணை கேட்டேன் மறுக்கப்பட்டது. மேலும் என் புகாரினையும் ஏற்க மறுத்து இங்கு கேள்வி கேட்கிறீர்களே திருப்பதியில் எவ்வளவு காசு கொடுக்கிறீர்கள் என கேலியும் பேசினர், நானோ அங்கு கூட ஏழைகள் செல்ல 24 மணியும் தர்ம தரிசனம் உண்டு என்று கூறி கோபத்தோடு வெளியேறினேன்.
பிறகும் வரிசையில் நின்று 5ரூ கொடுத்து நுழைவாயில் சென்றதும் நிறுத்தப்பட்டேன். அப்பொழுது ஒரு VIP எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தன் குடும்ப சகிதம் உள்ளே சென்று கொண்டிருந்தார். மீண்டும் வரிசை விடுவதற்குள் நீயும் உன் பிச்சை கோலத்தை மாற்றி கெளரவ கோலத்திற்கு மாறியிருந்தாய் ஆம் நேரம் 5 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. கையில் உள்ள சீட்டை கிழித்து எறிந்தேன். தரிசனம் முடிக்கும் முன்பாக தங்க பல்லி பார்க்க 2ரூ 100 கால் மண்டபம் பார்க்க 1 ரூபாய் என, ஒரு அருங்காட்சியகம் நுழைந்து வந்தது போல் இருந்நது. அப்பொழுது தான் நினைத்தேன் நாத்திகர்கள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள் என்று. வெளியில் வந்ததும் வீதிக்கடையில் சிரித்த முகத்துடன் பெரியார் தெரிந்தார். தயவு செய்து மாறிவிடு மாற்றிவிடு.
கடிதம் கண்டவுடன் பதில் போடவும்.
இவண்
ஈகைவேந்தன்