Friday, September 26, 2008

ஆகஸ்ட் 15 கொண்டாட்டம்

\

ஆகஸ்ட் 15 அன்று எங்கள் வீட்டு வாண்டுகள் வெள்ளையும் சொள்ளையுமாக உடையணிந்துக் கொண்டு பாசக்கிளிகளாக வலம் வந்த காட்சிகள் தான் இவை.

Thursday, September 25, 2008

ரெளத்திரம் பழகு


ரெளத்திரம் பழகு என்றான் பாரதி இன்றைய இளைஞர்களிடம் இக்குணம் குறைந்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக எல்லோரையும் வெட்டிக் குத்துவது அல்ல பாரதி சொன்னதன் பொருள். நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டியவற்றை, நமது உரிமையைக் கேட்டுப் பெற்றாலே போதும். அன்றாடம் சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்லும் கொடுமை பெருகி வருகிறது. நமக்கு ஏன் வம்பு இதைக் கேட்டு கெட்டப்பெயர் பெறுவானேன், என ஒதுங்கிச் செல்லும் மனோபாவமே நாம் இன்னும் அடிமைத்தளையிலிருந்தது முற்றிலும் விலகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு அலுவலகங்களில், அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளில், கடைக் கண்ணிகளில் என நாம் ஒவ்வொரு நாளும் பல மனிதர்களை சந்திக்கின்றோம். நமக்கு நிறைவேற வேண்டிய வேலைகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைக்காகவே அவர்கள் உரிமையோடு கையூட்டுப் பெறுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறையாவது நாம் ஏன் என்று கேள்விக் கேட்டுப் பார்த்திருக்கிறோமா? பேருந்து நிலையங்களில் சிறுகடைகளில் பொருளின் அதிக பட்ச விலையினை விட அதிகமாக காசு வாங்குவதைத் தான் கேள்விக் கேட்டிருப்போமா? ஒரு சில உணவு விடுதிகளுக்கு சென்று பொருள் தரமாக இல்லாவிட்டால் கூட அதனை அப்படியே வைத்து விட்டு பணமும் கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே வெளியேறுகிறோமே, ஒரு முறையாவது கோபமாக வேண்டாம் அன்பாகவாவது நல்லப் பொருளைப் போடச் சொல்லி வலியுறுத்துகிறோமா? அனைத்தும் நாம் செய்யும் தவறுகளே தவறு செய்பவர்களைக் கேள்வி கேட்காமல் அவர்களை அப்படியேத் தொடரச் செய்வது நம் தவறுதான்.

இன்றைய கணினி யுகத்தில் அரசு அலுவலகங்களின் பல பணிகள் இணைய வழியிலேயே எளிதில் நிறைவேற்றும் வகையில் நடைமுறைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், பத்திரப் பதிவு நடைமுறைகள் என பலவும் இணையவழிச் சேவைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் கையூட்டுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

இதில் நாம் நம் பணத்தை பெரும் பகுதி இழக்கின்றோம். இது போல் நாம் அறிய, நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களிடம் நாம் இழக்கும் பணத்தை சேமித்து நம் மனதார எழைக்குழந்தைகளின் கல்விக்கோ ஆதரவற்ற சிறுவர்களுக்கோ, முதியோர் இல்லங்களுக்கோ நாமே உதவி செய்யலாம். இதன் வழி சமூகத்தின் உயர்வுக்கு நம்மால் ஆன பணியினைச் செய்தோம் என்ற மன நிறைவும் நமக்குக் கிடைக்கும்.
அன்புடன்
ஈகைவேந்தன்

Monday, September 15, 2008

வால் பசங்க


குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

Wednesday, July 30, 2008

மொழி கடந்த இசை



இந்த பாடல் பாடும் அக்கா யார் என்று எனக்கு தெரியாது ஆனால் இவர்கள் பாடும் பாடலும் அவர்களின் முக பாவமும் மொழி கடந்து இசையை ரசிக்க வைக்கிறது.
கேட்டுப் பார்த்து மகிழுங்கள்.



Friday, June 20, 2008

வாழைக்கு வாருங்கள்

வாழைக்கு வாருங்கள்
அன்புள்ள தோழமைகளே, வணக்கம்.
நான் வாழை என்கிற அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றேன். அதன்குறிக்கோளும் செயல்திட்டங்களையும் இங்கு பதிவாக்கியுள்ளேன். எங்கள்அமைப்பு தற்பொழுது புதிய அங்கத்தினர்களை வரவேற்கிறது. விருப்பமுடையவர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றலாம்.

வாழை

வரலாறும் வழித்தடமும்

நகர்புற மாணவர்களுக்கு இணையான கல்வித்தரமும் வாழ்வியல் வளர்ச்சியும் சாதரண கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு செயல்படக்கூடிய அமைப்பே வாழையாகும். பணத்தேவைகளைக விட சின்னச் சின்ன வழிகாட்டுதலும் அன்புடன் கூடிய அறிவுரையுமே அம்மாணவர்கள் தம் கனவு மெய்படுவதற்கான தூண்டுகோலாய் அமைகிறது என்பதனை வாழை நிருபித்து வருகிறது. தமிழ் நாட்டில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் எழைக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழிகாட்டியாக வாழையில் இணைய விருப்பமுடையவர்களையும் பொருளுதவி செய்யக்கூடியவர்களையும் வாழை அன்புடன் வரவேற்கிறது.


வழிகாட்டிகள்

சாதாரண கல்விமுறைக்கு அப்பால் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்ட மனிதனாக மாணவர்கள் உருவாவதற்காக கல்வி, உடல் நலம், தகவல் பரிமாற்றம் குறித்த ஆலோசனைகளை அக்கறையோடு நேரம் ஒதுக்கி மாணவர்களுக்கு சொல்லி தரும் ஆர்வமுடையவர்கள் வழிகாட்டிகளாக இணையலாம்.

யார் இணையலாம்

ஒரு வருடத்தில் உள்ள வார இறுதி நாட்களில் 10 நாள்கள் மட்டும் ஒதுக்கி அவர்கள் வாழும் பகுதிக்கு குழுவாகச் சென்று தன் ஆலோசனைகளை வழ்ங்கி ஒரு மாணவனின் வாழ்வில் ஒளியேற்ற விருப்பமுடையவர்கள் வழிகாட்டியாகலாம்.

தங்கள் முகவரி

வாழையில் வழிகாட்டியாகவோ பொருளுதவி செய்யக் கூடியவராகவோ இணைய விரும்புபவர்கள் கீழ் உள்ள தகவல்களோடு vazhai.uravugal@gmail.com என்ற முகவரியினைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவல்கள் அறிய www.vazhai.org என்றஇணையத் தளத்தினை பார்வையிடவும்.

வாழை அன்பில் செழித்த உறவு இது தலைமுறை தாண்டிய கனவு

Sunday, April 13, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்



அன்புள்ள கடவுளாகிய காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு அநேக ஆசிகளுடன் ஈகைவேந்தன் எழுதுவது. நீ கல்லா? கடவுளா? என்கிற விவாதம் இந்த பூவுலகில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தாலும் நீ கடவுள்தான் என நம்பிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். நானும் உன்னை கடவுளாக நம்பும் சில நண்பர்களும் உன்னைக் காண நேற்று(12.04.08) காஞ்சிக்கு வந்தோம், அங்கு எனக்கு நேர்ந்த அவலத்தை உனக்கு பிறகு சொல்கிறேன். உனக்கு நேர்ந்த அவலத்தினை முதலில் நீ தெரிந்துகொள்.

காஞ்சியில் உன்னை காண நாங்கள் வந்து சேர்ந்தது நண்பகல் நேரம், அது நீ ஒய்வு எடுக்கும் நேரமானதால் நான்கு மணிக்கு நடை திறக்கும் வரை காத்திருந்து வரிசையில் நின்றோம் நுழைவாயில் அருகில் வ்ந்தவுடன் உன்னை காண, தலைக்கு 5ரூ தரவேண்டும் என்றனர். சரி தவறுதலாக கட்டண தரிசன வரிசையில் நின்றுவிட்டோம் என எண்ணி தர்ம தரிசன வரிசை எது என வினவ, தர்மதரிசனம் எல்லாம் கிடையாது காசு கொடுத்துதான் செல்ல வேண்டும் என்றனர். காசில்லாமல் ஒருவர் வந்தால் என்ன செய்வீர்கள் என்றேன், அதற்கு அவர்கள் காத்திருந்து 5 மணிக்கு மேல் காசில்லாமல் செல்லலாம் என்றனர். காசு கொடுத்துக் கடவுளை பார்க்க அவர்கள் கட்டாயப் படுத்துவதாக எனக்கு தோன்றியது.

இது குறித்து எனது புகாரினை பதிவு செய்ய அலுவலகத்தை நாடினேன். அங்கோ சனி,ஞாயிறு உயர் அதிகாரி விடுப்பு ஆனதால் பொறுப்பு அதிகாரி இருந்தார். அவரிடம் நான் ஏன் கட்டணம் வசூல் செய்கிறீர்கள் என கேட்க அவரோ ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும் தான் கட்டணம் வாங்குகின்றோம் என்றார் கோவில் வருமானம் குறைவாக இருப்பதால் இது போன்ற ஒரு நடவடிக்கை பின்பற்றப்படுவதாக கூறினார்.

எவ்வளவோ வழிகளில் வீணாக பணம் செலவு செய்யும் நமது அரசாங்கமா தன் வறுமைக்காக உன் கையில் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் பக்தர்களிடம் பிச்சை எடுக்க வைக்கிறது, நீ எடுத்த கட்டாய பிச்சைக்காசை வைத்துதானா உன்னை பராமரிக்கிறது என்ற என் வாதத்தை அந்த அதிகாரி ஏற்கவில்லை. நான் இந்த கட்டணம் குறித்த அரசாணை கேட்டேன் மறுக்கப்பட்டது. மேலும் என் புகாரினையும் ஏற்க மறுத்து இங்கு கேள்வி கேட்கிறீர்களே திருப்பதியில் எவ்வளவு காசு கொடுக்கிறீர்கள் என கேலியும் பேசினர், நானோ அங்கு கூட ஏழைகள் செல்ல 24 மணியும் தர்ம தரிசனம் உண்டு என்று கூறி கோபத்தோடு வெளியேறினேன்.

பிறகும் வரிசையில் நின்று 5ரூ கொடுத்து நுழைவாயில் சென்றதும் நிறுத்தப்பட்டேன். அப்பொழுது ஒரு VIP எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் தன் குடும்ப சகிதம் உள்ளே சென்று கொண்டிருந்தார். மீண்டும் வரிசை விடுவதற்குள் நீயும் உன் பிச்சை கோலத்தை மாற்றி கெளரவ கோலத்திற்கு மாறியிருந்தாய் ஆம் நேரம் 5 மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. கையில் உள்ள சீட்டை கிழித்து எறிந்தேன். தரிசனம் முடிக்கும் முன்பாக தங்க பல்லி பார்க்க 2ரூ 100 கால் மண்டபம் பார்க்க 1 ரூபாய் என, ஒரு அருங்காட்சியகம் நுழைந்து வந்தது போல் இருந்நது. அப்பொழுது தான் நினைத்தேன் நாத்திகர்கள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள் என்று. வெளியில் வந்ததும் வீதிக்கடையில் சிரித்த முகத்துடன் பெரியார் தெரிந்தார். தயவு செய்து மாறிவிடு மாற்றிவிடு.

கடிதம் கண்டவுடன் பதில் போடவும்.

இவண்

ஈகைவேந்தன்

Wednesday, April 2, 2008

என் பயணங்களில்...

அன்புள்ள தோழமைகளே வணக்கம், என் வழி பயணங்களில் நான் சந்தித்த சில அனுபவங்களை தங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். இரவு நேர பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். இரவு நேரங்களில் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தும் உணவு விடுதிகளில் அவர்கள் வைப்பதை அப்படியே கடனே என சாப்பிடுபவர்கள் நம்மில் பலர். அதுவும் நமது பேருந்து ஊழியர்களோ யாரும் இல்லா வனாந்தரம் போல் உள்ள விடுதியில் தான் பேருந்தை நிறுத்துவார்கள் அவர்களுக்கு சிறப்பாக கிடைக்கும் சலுகைகளுக்காக நம்மை அங்கு இறக்கி விடுவார்கள்.
சூழலை உணர்ந்த உணவு விடுதியினரோ நமக்கு வெந்ததையும் வேகாததையும் தருகின்றனர். நம்மில் ஒருவரும் கேள்வி கேட்காமல் விருப்பின்றி அதனை உண்ண முடியாமல் பணம் கொடுத்த பாவத்திற்கு அதனை சாப்பிட்டு வயிறை கெடுத்து கொள்கிறோம். இனியாவது இது போன்ற தருணங்களில் அதன் மேலாளரை அணுகி நம் குறையினை பதிவு செய்வோம். அவர்களும் சிறிதாவது சிந்திப்பார்கள்.

அன்புடன் ஈகைவேந்தன்

Monday, March 24, 2008

அன்புள்ள நண்பர்களே

வணக்கம் உங்கள் ஈகை வேந்தனாக கணினியில் களம் இறங்கி உள்ள என் கருத்துக்களை இனி வரும் காலங்களில் பதிவு செய்கின்றேன். நன்றி. அன்புடன் ஈகை.