Thursday, September 25, 2008

ரெளத்திரம் பழகு


ரெளத்திரம் பழகு என்றான் பாரதி இன்றைய இளைஞர்களிடம் இக்குணம் குறைந்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக எல்லோரையும் வெட்டிக் குத்துவது அல்ல பாரதி சொன்னதன் பொருள். நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டியவற்றை, நமது உரிமையைக் கேட்டுப் பெற்றாலே போதும். அன்றாடம் சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்லும் கொடுமை பெருகி வருகிறது. நமக்கு ஏன் வம்பு இதைக் கேட்டு கெட்டப்பெயர் பெறுவானேன், என ஒதுங்கிச் செல்லும் மனோபாவமே நாம் இன்னும் அடிமைத்தளையிலிருந்தது முற்றிலும் விலகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு அலுவலகங்களில், அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளில், கடைக் கண்ணிகளில் என நாம் ஒவ்வொரு நாளும் பல மனிதர்களை சந்திக்கின்றோம். நமக்கு நிறைவேற வேண்டிய வேலைகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைக்காகவே அவர்கள் உரிமையோடு கையூட்டுப் பெறுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறையாவது நாம் ஏன் என்று கேள்விக் கேட்டுப் பார்த்திருக்கிறோமா? பேருந்து நிலையங்களில் சிறுகடைகளில் பொருளின் அதிக பட்ச விலையினை விட அதிகமாக காசு வாங்குவதைத் தான் கேள்விக் கேட்டிருப்போமா? ஒரு சில உணவு விடுதிகளுக்கு சென்று பொருள் தரமாக இல்லாவிட்டால் கூட அதனை அப்படியே வைத்து விட்டு பணமும் கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே வெளியேறுகிறோமே, ஒரு முறையாவது கோபமாக வேண்டாம் அன்பாகவாவது நல்லப் பொருளைப் போடச் சொல்லி வலியுறுத்துகிறோமா? அனைத்தும் நாம் செய்யும் தவறுகளே தவறு செய்பவர்களைக் கேள்வி கேட்காமல் அவர்களை அப்படியேத் தொடரச் செய்வது நம் தவறுதான்.

இன்றைய கணினி யுகத்தில் அரசு அலுவலகங்களின் பல பணிகள் இணைய வழியிலேயே எளிதில் நிறைவேற்றும் வகையில் நடைமுறைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், பத்திரப் பதிவு நடைமுறைகள் என பலவும் இணையவழிச் சேவைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் கையூட்டுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

இதில் நாம் நம் பணத்தை பெரும் பகுதி இழக்கின்றோம். இது போல் நாம் அறிய, நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களிடம் நாம் இழக்கும் பணத்தை சேமித்து நம் மனதார எழைக்குழந்தைகளின் கல்விக்கோ ஆதரவற்ற சிறுவர்களுக்கோ, முதியோர் இல்லங்களுக்கோ நாமே உதவி செய்யலாம். இதன் வழி சமூகத்தின் உயர்வுக்கு நம்மால் ஆன பணியினைச் செய்தோம் என்ற மன நிறைவும் நமக்குக் கிடைக்கும்.
அன்புடன்
ஈகைவேந்தன்

No comments: