Saturday, September 5, 2015

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....


நான் பிறந்ததும் என் முதல் குருவாக விளங்கிய என் தாய் தந்தையின் பாதமலர்களை வணங்குகின்றேன்.... பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை என் வளர்ச்சிக்கு காரணமாக என் நினைவில் நிலைத்து நிற்கும் ஆசிரியர்களை நினைவு கூர்கின்றேன்.. இத்தருணத்தில்... 
கேம்பிரிட்ஜ் கான்வெண்ட்டில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்கையில் பெயர் தெரியாத அன்பு பரிமாறிகொண்ட ஓர் ஆசிரியை, சரஸ்வதி துவக்கப்பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த மல்லிகா டீச்சர், நான்காம் வகுப்பில் எனக்கு பாடம் பயிற்றுவித்த அன்பான கமலா அம்மா, ஐந்தாம் வகுப்பில் கம்பீரத்தை எனக்கு கற்றுத்தந்து என்னை முதல் மதிப்பெண் எடுக்க வைத்த பாலகிருஷ்ணன் ஐயா, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எனக்குள் நல்ல மனிதத்தன்மையை விதைத்த எங்கள் பாலகுண்டு ஐயா, 6 ஆம் வகுப்பு முதல் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ராமலிங்கம் ஐயா, கணிதம் கற்றுக்கொடுத்த சீனிவாசன் ஐயா, சமூக அறிவியல் சொல்லிக்கொடுத்த சுகுணா டீச்சர், எங்கள் பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்காமல் எங்களை கட்டி காத்த எங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், 


10 ஆம் வகுப்பில் ஒய்.எம்.சி.ஏ பள்ளியில் நட்புநிலையில் மாணவர்களை நடத்திய தமிழ் ஆசிரியர்களான நக்கீரன் மற்றும் சந்திரன் ஐயாக்கள், 10 ஆம் வகுப்பு கணித ஆசிரியர் வின்செண்ட் சார், உசேன் சார், 11 ஆம் வகுப்பில் எங்களுக்கு பாடம் எடுத்த கணிதம்-நாராயணன், தாவரவியல்-நளினி, ஆங்கிலத்தையும் இனிக்கும் விதத்தில் சொல்லித் தந்த - பானுமதி அம்மா, எங்களுக்கு இயற்பியலை இயல்பாய் சொல்லித் தந்த ஆசிரியர் மற்றும் வேதியியல் பீர்முகம்மது சார் ஆகியோர்களின் பாத மலர்களை பணிகின்றேன். 


மேலும் நந்தனம் கல்லூரியில் நான் கால்பதித்த முதல் நாளிலேயே எனக்கு வழிகாட்டிய தமிழ்த்துறை அர்த்தநாரீஸ்வரன் ஐயா, தனியொரு மாணவனாக நான் மட்டுமே கல்லூரிச் சென்றாலும் என் ஒருவனை மட்டுமே உட்கார வைத்து பாடம் நடத்திய பாலகிருட்டிணன் ஐயா, கல்லூரியில் இளங்கலை பயிலும் பொழுதே என்னை பேராசிரியர் பணிக்கு படிக்கும் படி என்னை வழிகாட்டிய மதிப்பிற்குரிய சீ. குணசேகர் ஐயா, பகுத்தறிவை எங்களுக்கு பாசத்துடன் ஊட்டிய கமலாம்மாள், கடவுள் பக்தியை எதிர்பாராமல் கற்றுக்கொடுத்த பானுமதி அம்மா, எங்களுடன் நட்புநிலையில் பழகி பாடம் சொல்லிக் கொடுத்த விஜயாம்மா...எங்கள் அறிவை செம்மைப்படுத்த எங்களைத் தூண்டிய மங்கையர்க்கரசி அம்மா... முதன் முதலாக கல்லூரிக் காலத்தில் ஆங்கில இந்து நாளிதழை எனக்கு அறிமுகப்படுத்தி ஆங்கிலம் படிக்க வலியுறுத்திய நாராயணன் ஐயா...கலைத்துறையில் சாதனை படைக்கும் படி தமிழ் படிக்க எங்களை வலியுறுத்திய முத்துவேல் ஐயா, உ.சுப்பிரமணியன் ஐயா, அன்பின் திரு உருவாய் எங்களை எப்பொழுதும் வழிநடத்திய எங்கள் துறைத்தலைவர் சடகோபன் ஐயா ஆகியோரின் பொற்பாதங்களைப் பணிகின்றேன். 


முதுகலை பயில சென்னை மாநிலக்கல்லூரியில் நான் நுழைந்ததும்...எனக்கு வாய்ப்பளித்து மாணவனாய் சேர்த்துக் கொண்ட எங்கள் தமிழ்த்துறைத் தலைவர் ஆடியபாதம் ஐயா, கவிராயர் ஐயா, சுப்புலட்சுமி அம்மா, ஜம்புலிங்கம் ஐயா, வேலு ஐயா, நட்புடன் திகழ்ந்த டேவிட் ஐயா முதுகலை ஆய்வில் என் நெறியாளராய் விளங்கிய அர்த்தநாரீஸ்வரன் ஐயா, அன்புநிலையில் எங்கள் பெயர்களை நினைவு வைத்துக்கொண்டு அழைக்கும் முத்துசுவாமி ஐயா, ஆய்வியல் நிறைஞர் படிப்பில் என்னை மாணவனாக ஏற்று என் வாழ்வில் பெரும் ஏற்றத்தைப் பெறச் செய்த என் நெறியாளர் உதயகுமார் ஐயா ஆகியோர் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள். மாணவ நிலையைக் கடந்து பேராசிரியர் பணிவாய்ப்பு எனக்கு கிடைத்த பின் ஓர் ஆசிரியராக நான் என்னை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்திய என் துறை பேராசிரியர்கள்... திரு. வரதன் ஐயா, மற்றும் எங்கள் சிவசுப்பிரமணியம் ஐயா மற்றும் இலக்குமி நாராயணி அம்மா ஆகியோரையும் என் ஆசிரியர்களாகவே கருதுகின்றேன்... அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம். மேலும் நட்புநிலையில் ஆசிரியர் மாணவர் நல்லுறவைப் பேணும் முறையை நான் அறிய எனக்கு பெரும் தாக்கமாக இருந்த அண்ணன் பழநியப்பன் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும். 


இன்று முனைவர் பட்ட மாணவராக என்னை ஏற்றுக்கொண்டு என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராகவும் ஒரு அண்ணனாகவும் இருந்து என் ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் என் அன்பும் நட்பும் பாசமும் என்றும் உரித்தாகும். 


என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையில் என் நினைவில் நின்ற நான் சொல்ல மறந்த... அன்றாட வாழ்வில் போகிற போக்கில் நமக்கு பாடம் சொல்லித்தரும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும். 


இறுதியாக நான் என் மாணவர்களுக்கு சொல்வதெல்லாம் அப்துல் கலாமின் வரிகள் தான்.... அவை... நல்ல பேராசிரியரிடம் கற்றுக்கொள்ளும் மோசமான மாணவனைக் காட்டிலும் மோசமான பேராசிரியரிடம் கற்றுக் கொள்ளும் நல்ல மாணவன் மிகுதியாகக் கற்றுக் கொள்கிறான். ஆகவே மாணவர்களே நல்ல மாணவர்களாய் இருங்கள்... என் நினைவில் என் ஆசிரியர்கள் நிற்பது போல் என் மாணவர்கள் நினைவில் நானும் நல்ல பேராசிரியராக முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன். 


நன்றி..