Thursday, February 26, 2009

அமேரிக்க ஆஸ்காரும் அம்மூர் கலைமாமணியும்


முதலில் இசைத்துறையில் சாதித்து நம் இந்தியாவை நம் தமிழகத்தை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த உண்மையான உலக நாயகன் A.R.ரஹ்மான் அவர்களுக்கு நமது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கார் பெறும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் அவரது உழைப்பையும் உணர வேண்டும். ஏதோ காலநேரம் கூடிவந்து அதிர்ஷ்டத்தில் அவர் இந்த விருதினைப் பெற்றார் என்று எண்ணுவோர் அவர் விளம்பர படங்களுக்கு இசை அமைத்த காலங்களில் இருந்து அவர் உழைப்பை அளவிட வேண்டும். அது மட்டும் அல்லாமல் விருதுக்கு தேர்ந்தெடுக்கும் குழுவின் பல விதமான தேர்வு நிலைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த சூழலில் இரு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற பிறகும் A.R.ரஹ்மான் பேசிய பணிவான பேச்சுக்கே இன்னொரு ஆஸ்கார் கொடுக்கலாம். இசை அனைவருக்கும் பொதுவானது. ஆதலால் உலக மனிதனாக ஆங்கிலத்திலும், ஒரு இந்தியனாக இந்தியிலும், ஒரு தமிழனாக “எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி உலக அரங்கில் கைத்தட்டலைப் பெற்ற மனிதனாகிய A.R.ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் விருது கூட தலை வணங்கியது ஆச்சரியமில்லை.



அமேரிக்காவிலிருந்து அப்படியே பிளைட் பிடித்து அம்மூருக்கு வாருங்கள் சமீபத்தில் 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்குரியவர்கள் அனைவரும் பாரட்டப்பட வேண்டியவர்கள் தான் என்று தமிழக அரசே முடிவு செய்துவிட்டுதான் விருதினை அறிவிக்கிறது. ஆனால் பாசமிகு தமிழர்களோ இந்த விருதுக்கான பட்டியலில்

தங்கள் வீட்டு நாய்க்குட்டியின் பெயரும் வந்திருக்கிறதா என சரி பார்க்கும் அளவிற்கு கேலிச்சித்திரமாகியுள்ளது இந்த விருதின் தன்மை என்பது வேதனை அளிக்கிறது. உண்மையாக சாதித்த இலக்கிய வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் இந்த விருது கிடைக்கும் அதே வேளையில் சற்றும் தகுதி அல்லாத நயன்தாரா, அசின் முதலான நபர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அந்த விருதையே ஏளனம் செய்வதாக இருக்கிறது. பரதக்கலைஞர். திருமதி.ரஜினி மகள் அவர்களை விட சிறப்பு வாய்ந்த பரதக்கலைஞர்கள் வேறு யாரும் இல்லை என்பது பரதக்கலைக்கே பெருத்த அவமானமாக இல்லையா? எண்ணிக்கைக்காக தகுதியல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். தகுதியற்ற நபர்கள் தாங்களே முன்வந்து இந்த விருதுகளை புறக்கணிக்க வேண்டும். இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு உண்மையான வல்லுநர் குழுவினைக் கொண்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஏனென்றால் இந்த விருதுக்குரியவர்களுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நம் தமிழனின் வியர்வைத்துளிகள் அவை நல்ல காரியத்திற்கு பயன்பட தமிழகஅரசு மனது வைக்க வேண்டும்.

இவண்

ஈகைவேந்தன்




No comments: