தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக்
கல்விக்கு மாறும்
உயர்கல்வி மாணவர்களின் உளவியல் சிக்கல்களும்
தீர்வுகளும்.
மொழி என்பது அறிவு அன்று, அது அறிதலுக்கான ஒரு
கருவியாகும். கருத்துப் பகிர்தலுக்காக ஆதிமனிதன் பயன்படுத்திய முதல் மொழி சைகை மொழியாகும்.
மனிதனின் தேவையை அம்மொழி நிறைவு செய்யாதச் சூழலில் குரல் ஒலி சார்ந்த மொழியை நோக்கி
மனிதன் பயணிக்கத் தொடங்கினான். தேவையே மனிதனை வளர்த்தெடுக்கின்றது என்னும் சான்றோர்
கூற்றுப்படி மனிதனின் உடல் உறுப்புக்கள் குரல்மொழி உச்சரிப்புக்கு ஏற்ப வளர்ச்சி அடைகின்றது.
மனிதன் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றான். மனிதனின் தேவைக் கருதி தன்னை மாற்றிக் கொள்ளும்
இந்தக் குணமே அவனை இந்த உலகில் நிலைக்கொள்ளச் செய்கின்றது.
ஆதிமனிதனே மொழி சார்ந்து, சூழல் சார்ந்து தன்னை
மாற்றிக் கொண்டான். ஆனால் இன்றைய மாணவர்களோ கால ஓட்டத்திற்கு ஏற்ப மொழி சார்ந்து, சூழல்
சார்ந்து தம்மை மாற்றிக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அத்தயக்கம் சார்ந்த அவர்களது
உளவியல் சிக்கல்களை வெளிப்படுத்தி, அவர்களை மேம்படுத்துவதற்கான தீர்வுகளைக் காண்பதே
இக்கட்டுரையின் நோக்கம்.
உளவியல்
சிக்கல்கள்
தமிழ்வழிக்
கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறி உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் தன்னுடைய
புதியச் சூழல் சார்ந்து மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலவழியில் தாம்
படிக்கும் பாடங்களில் உள்ள அவர்களது விருப்பமின்மை, அவர்கள் அந்த பாடங்களை உள்வாங்கிக்
கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இது
அவர்களது தேர்வு முடிவில் தோல்வியாக வெளிப்படுகின்றது. உண்மையில் தாய்மொழியில் உயர்கல்வியை
கற்கும் மாணவனே உயர்தர அறிவினைப் பெறுகின்றான். இதனைக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்
அவர்கள் ” உயர்தரக்கல்வி நமது பாஷை மூலமாகக் கொடுக்க
வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால் மாத்திரமே அக்கல்வியால் நமது நாட்டுக்குப்
பயனுண்டாகுமென்றும் சொல்லக்கூட நமக்கு இன்னும் தைரியம் பிறக்கவில்லை” (தாகூர், தாய்மொழியில்
கல்வி, மாடர்ன் ரெவியூ) எனக் குறிப்பிடுகின்றார்.
தாய்மொழியில் கற்கும் கல்வி
என்பது பொருள் உணர்ந்து படிப்பது மற்றும் சுயசிந்தனைக்கு வழிவகுப்பதாகும். மொழி புரியாமல்
படிக்கும் கல்வி என்பது திணிக்கப்பட்டதாகவே அமையும். இக்கருத்தை பெரியாரும் வலியுறுத்தியிருக்கின்றார்
என்பதை ”தந்தை பெரியாருடைய கொள்கை ஆங்கிலத்தைப்
புறக்கணிப்பதல்ல. ஆனால், அதே நேரத்தில் கல்வி என்பது
கற்றுக் கொள்வதற்காக. கல்வி என்பது உள்ளே இருப்பதை வெளியே எடுப்பது. அதுதான் இங்கே
பிரச்சினையே. நம்முடைய நாட்டிலே கல்வி என்பது எதையோ திறந்து உள்ளே மூடிவைத்து
அனுப்புவதைப் போலத்தான் இன்றைய கல்வி, சிந்தனையாளர்கள்
மத்தியிலே இருக்கிறது. கல்வி என்பது மனித மூளையிலிருந்து ஒருவருடைய ஆற்றலைத்
திறமையை வெளிக்-கொணர்வது”. (மங்கள முருகேசன், உண்மை
இதழ், தாய்மொழியில் கல்வி,) என்ற கூற்றால் உணர முடிகின்றது. இருப்பினும் இன்றையச் சூழலில்
ஆங்கில மொழியில் திறம் பெற்றிருத்தல் என்பதும் பணிவாய்ப்பு சார்ந்து தவிர்க்க முடியாத
ஒன்றாக உள்ளது.
தாழ்வு
மனப்பான்மை
ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்துப் பகிர்தல்
என்பதும்கூட மாணவர் தம் ஆங்கில மொழித்திறன் குறைபாடு காரணமாக தடைபட்டுப் போகின்றது.
தமக்கு தெரிந்த செய்தியை ஆங்கில மொழியில் வெளிப்படுத்த இயலாத காரணத்தாலேயே தன்னை ஓர்
அறிவிலியாக மாணவன் கருதுகின்றான். இந்நிலை
மாணவர்களிடையே மறைமுகமாக தாழ்வு மனப்பான்மையை வளர்க்கின்றது. ஆங்கில மொழி மீதான வெறுப்பு அந்த பாடத்தின் மீதும்
அம்மொழியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மீதுமாக மடைமாற்றம் அடைகின்றது.
குழு
மனப்பான்மை
மாணவர்களிடையே
அவர்கள்தம் மொழியறிவுச் சார்ந்த குழு மனப்பான்மை உருவாகின்றது. மாணவர்தம் துறைச்சார்ந்த
கல்லூரி விழா ஏதெனும் நடக்கும் பொழுது, தாய்மொழியை பின்னணியாக உடைய மாணவர்கள் அவ்விழாவில்
பின்னணியில் இயங்கும் ஓர் உதவியாளராகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.
அதுமட்டுமின்றி தன்னொத்த மொழித்திறன் வாய்ந்த
மாணவர்களோடு மட்டுமே நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கின்றனர். இந்நிலை மாணவர்கள் இடையே
வேற்றுமை வளர காரணமாகின்றது.
குடும்ப,
பொருளாதாரப் பின்னணி
ஒவ்வொரு மாணவரும் தமது மொழியறிவினை தமது குடும்பம்
மற்றும் பொருளாதார பின்னணியோடு தொடர்பு படுத்திக் கொள்கின்றனர். ஆங்கில மொழியாளுமை உடைய மாணவர் மேட்டிமைத் தனத்தோடும்,
தமிழ்மொழி பின்னணி உடைய மாணவர் தாழ்நிலையோடும் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்.
தம் மொழியறிவு சார்ந்த தாழ்வு மனப்பான்மையே தமிழ்மொழியைப் பின்னணியாக கொண்ட மாணவர்களைக்
கல்லூரியின் வளாகத்தேர்வு முதலானவற்றில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டச்செய்கின்றது.
தீர்வுகள்
ஆங்கிலமொழியும் தமிழ்மொழி போன்றே தகவல் தொடர்புக்கும்,
கருத்து பரிமாற்றத்துக்கும் பயன்படும் ஒரு
மொழி ஆகும். ஒவ்வொரு மாணவரும் தாய்மொழி அல்லாத பிறமொழியை கற்கும் பொழுது, அம்மொழிக்கு
மொழி என்பதைத் தவிர வேறு எந்தவொரு கூடுதல் சிறப்பும் இல்லை, ஆனால் ஒவ்வொருவருக்கும் அவர்தம் தாய்மொழி என்பது உணர்வோடு, அறிவோடு தொடர்புடையது. இன்றையச் சூழலில் ஆங்கில மொழி என்பது
வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் மொழியாக உள்ளது. இத்தகையச் சூழலில் ஆங்கிலம் ஒரு மொழியாக
மட்டுமல்லாமல் ஒரு அறிவாகவும் உருவகிக்கப்படுகின்றது. இந்த மாயை முதலில் நமது மாணவர்கள்
மத்தியில் இருந்து விலக வேண்டும்.
ஆசிரியர் மாணவர் கடமை
நீரில்
வாழும் தவளை எவ்விதம் தன்னை நிலத்திற்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்கின்றதோ, அதுபோல
நமது மாணவர்களும் பொருளாதார மற்றும் பணிவாய்ப்புக் கருதி ஆங்கில மொழியை தன்வயப்படுத்திக்
கொள்ள முன்வரவேண்டும். மாணவர்கள் பேசும் ஆங்கிலம் தவறாக இருப்பினும் அதனை எள்ளி நகையாடாமல்
தாய்மை உணர்வோடு அதனைத் திருத்த முன்வரும் ஆசிரியர்களும், நண்பர்களும் மிகவும் அவசியம்.
மாணவர்களும் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள அடிப்படையான ஒற்றுமை வேற்றுமைகளை
அலசி ஆராய்ந்து கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும்
தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தமிழில் சொல்லித்தர முன்வருவதோடு
ஆங்கிலத்திலும் அதனை அவர்கள் கற்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்த வேண்டும்.
இருமொழிகளும்
நன்கு தெரிந்த மாணவர்களைத் தமிழ்வழி பயின்ற மாணவர்களோடு இணைந்துத் துறைச்சார்ந்த, மொழிசார்ந்த
செயல்பாடுகளை நடத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். தமிழ்வழியில் ஆங்கிலத்தின் அடிப்படை
இலக்கணங்களை கற்றுக்கொள்ள உதவும் இணையத் தளங்களைக் காணும்படி மாணவர்களை அறிவுறுத்த
வேண்டும். ஆங்கிலக் கலந்துரையாடல்களில் தமிழ்வழி மாணவர்களும் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்த
வேண்டும். கற்றல் என்பது கற்றதைப் பிறர்க்கு கற்பிப்பதேயாகும். அதற்கு மொழி ஒரு தடையல்ல
என்பதை மாணவர் உணரும்படி செய்தல் வேண்டும். தம் கருத்தை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும்
ஆற்றலை மாணவன் அடையும் பொழுது அது பலகோடி மக்களுக்கும் பயன் நல்க கூடியதாக இருக்கும்
என்பதையும் மாணவர்க்கு உணர்த்த வேண்டும்.
மொழியை மனிதன் உருவாக்கினான், மொழி மனிதனை உருவாக்கவில்லை.
இருப்பினும் மொழி மனிதனுக்கு அறிவு சார்ந்தும் நாகரீகம் சார்ந்தும் பல கருத்துக்களைத்
தொடர்ந்து சொல்லித் தருகின்றது. அப்படிப்பட்ட மொழியை அனைவரும் கையாள்வது என்பது முயன்றால்
எளிமையாகும். ஒரு மொழியை மட்டும் தெரிந்த ஒருவன், அயல்நாட்டில் அயல்மக்களிடயே விடப்பட்டால்
அவன் அவர்களது மொழியை மிகவிரைவில் கற்றுக்கொண்டு விடுவான் என்பது கண்கூடு. அதுபோலத்தான்
தமிழ்மொழியை பின்னணியாகக் கொண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தோடு
முயற்சியும் மேற்கொண்டால் ஆங்கில மொழியை எளிதில் கற்று தமது ஆளுகைக்குள் மொழியை வசப்படுத்திவிட
முடியும்.
துணை
நூல்கள்
- தாகூர், தாய்மொழியில் கல்வி, மாடர்ன் ரெவியூ (மொழிபெயர்ப்புக் கட்டுரை,
சுதேசமித்ரன்)
- தாய்மொழியில்
கல்வி, உண்மை இதழ், மங்கள முருகேசன்.
(விளிம்புநிலை மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து சென்னையில் நடைபெற்ற AUT கருத்தரங்கில் என்னால் வாசிக்கப்பட்ட கட்டுரை இது. )
No comments:
Post a Comment